Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் வெளியீடு நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு சட்ட சிக்கல்களால் நீண்ட காலமாக தாமதமாகி வந்தது.
2017-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி, படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தனி நீதிபதி கே. குமரேஷ் பாபு, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதேசமயம், இது தொடர்பான வழக்கின் மேல் விசாரணையை நாளை மறுநாளுக்கு
(ஜூலை 17) ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கௌதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த உளவுத்துறை ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு தற்போது உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் நீதிமன்றம் என்ன உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b