கோவையில் கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
கோவை, 15 ஜூன் (H.S.) கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் தங்கி கல்வி கற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதி
Kovilpalayam Police Station


கோவை, 15 ஜூன் (H.S.)

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் தங்கி கல்வி கற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியுடன் அறிமுகமாகியிருந்தது தெரியவந்தது.

தொடக்கத்தில் சாதாரணமாக உரையாடி வந்த அவர்கள், பின்னர் மாணவியுடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவியை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் சமூக வலைதளங்கள் மற்றும் செல்பேசி மூலம் தொடர்புகொண்டு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு உள்ளான மாணவி, இறுதியாக கோவில்பாளையம் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கி, குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை கண்டறிய தனிப்படையை அமைத்தனர்.

தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் செல்பேசி விவரங்களை ஆய்வு செய்த போலீசார், குற்றச்சாட்டில் தொடர்புடைய இருவரும் சேலம் மாவட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து கோவை போலீசாரின் தனிப்படை சேலத்திற்கு சென்று, அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வேறு யாருக்காவது பகிரப்பட்டுள்ளனவா, மேலும் இதுபோன்ற சம்பவங்களில் அவர்கள் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN