Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தாமாகவே முன்வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
இத்துடன் இவர்கள் நான்கு பேரின் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்த 21 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் தலைமை மன்னித்து விட்டதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவிலிருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்த எம்எல்ஏக்களின் நடவடிக்கை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சபாநாயகரின் அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b