Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 ஜூன் (ஹி.ச.)
மீன்வளத்தை பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து, 61 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பின் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை உற்சாகத்துடன் கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தடைக்காலம் முடிந்ததை முன்னிட்டு நேற்றிரவே படகுகளை சீரமைக்கும் பணிகள், டீசல் நிரப்புதல், ஐஸ் கட்டிகள் மற்றும் மீன்பிடி வலைகளை ஏற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
இன்று அதிகாலை 3 மணி முதலே மீனவர்கள் குடும்பத்துடன் துறைமுகத்திற்கு வந்து, சிறப்பு பூஜைகள் செய்து படகுகளை கடலுக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மொத்தம் 231 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
சுமார் 10 முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கரைக்கால், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடைக்காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கடலுக்குச் செல்வதால் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர காவல் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b