Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது.
ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் இந்த கலந்தாய்வு மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பணியிட மாறுதல் கோரிக்கைகளை முன்வைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், தங்களது சொந்த மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு நடைபெறும் நேரடி கலந்தாய்வின் மூலம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதில் முக்கியமான நிபந்தனையாக, பணியிட மாறுதல் கோரி ஏற்கனவே இணையதளம் வழியாக விண்ணப்பித்த ஆசிரியர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என அத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நீண்ட நாட்களாக மாறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b