நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு– மலைநம்பி கோயிலுக்கு 12வது நாளாக பக்தர்கள் செல்ல தடை
நெல்லை, 15 ஜூன் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள திருமலை நம்பி கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தமிழ் மா
மலைநம்பி கோவில்


நெல்லை, 15 ஜூன் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள திருமலை நம்பி கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாக தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மலைநம்பி கோயிலுக்கு செல்லும் பாதை மற்றும் நம்பியாற்றில் குளிக்கும் பகுதிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.

இதையடுத்து, களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் தடை விதித்தனர்.

தற்போது வரை வெள்ளத்தின் வேகம் குறையாத காரணத்தால் அந்தத் தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன.

விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் திருக்குறுங்குடி வட்டக்குளமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால், வைகாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நாளை திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளநிலை சீரான பிறகே அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam