Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 15 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக வேகமாக உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
143 அடி முழு கொள்ளளவு கொண்ட காரையாறு அணை, தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் வெறும் 47 அடியாக மட்டுமே இருந்தது.இதையடுத்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, கடந்த 14 நாட்களில் மட்டும் 50 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இன்றைய நிலவரப்படி காரையாறு அணையின் நீர்மட்டம் 100.20 அடியாக பதிவாகியுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி விவசாய பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது, இந்த மாத இறுதி வரை விவசாய தேவைக்கு போதுமான நீர் இருப்பு இருக்குமா என்ற கவலை விவசாயிகளிடையே நிலவியது.
ஆனால் தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளதால், பாசனத்திற்கான நீர் பற்றாக்குறை அச்சம் குறைந்துள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட தாமிரபரணி பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேலும், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் வரவிருக்கும் விவசாய பருவத்திற்கும் தேவையான நீர் இருப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam