Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசின் முதன்மை நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான உரிமைத் தொகையான ரூ.1000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகை இன்று முதல் படிப்படியாக செலுத்தப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக மே மாதத்திற்கான தொகையும் பயனாளிகளுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டிருந்தது. திட்டத்தின் கீழ் பயன்பெறும் லட்சக்கணக்கான மகளிருக்கு இந்த மாதாந்திர உதவித்தொகை குடும்பச் செலவுகளுக்குப் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.
தொகை வரவு வைக்கப்பட்டது குறித்த தகவல் குறுஞ்செய்தி வாயிலாக பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் கைபேசி எண் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகள் தங்கள் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.
தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு காரணங்களால் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி விவரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிரின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம் தொடர்ந்து சீராக செயல்படுத்தப்படும் என்றும், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b