Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஜூன் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு மேம்பால பணிகள் துவங்கியது.
தற்பொழுது வரை மேம்பால பணிகள் நிறைவடையாத நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அதிகாரிகள் மேம்பால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சம்பத்குமார்,
இந்த மேம்பால பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இந்த பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைய அக்ரீமெண்டில் உள்ளதாகவும் ஆனால் இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் அளவில் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக என்றார்.
88 சதவிகிதம் இந்த பணிகள் முடிந்துள்ளது என்றும் 71 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் அதற்குள்ளாகவே எந்த ஒரு தர குறைபாடும் இல்லாமல் இந்த மாத இறுதிக்குள் இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
இந்தப் பகுதியில் இரண்டு காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படும் நிலையில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் குறித்து அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றார்.
மேம்பாலத்திற்கு அடியில் சர்வீஸ் சாலை குறுகலாக உள்ளது தொடர்பான கேள்விக்கு மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் அது குறித்து ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்
வெள்ளலூர் குப்பை கிடங்கு செயல் திட்டத்தை ஆய்வு செய்ய இருப்பதாகவும் அந்த பகுதியில் நிலத்தடி தண்ணீர் மஞ்சள் நிறமாக வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள், 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியை சரி செய்து மீண்டும் பசுமையாக மாற்றி மக்கள் அங்கு வசிக்கக்கூடிய அளவிற்கு பணிகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது என்றார்.
வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பான கேள்விக்கு அதனை விரிவு படுத்தக்கூடிய பணிகளை ஆராய்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அதேபோல் சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு நிதிநிலை அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேம்பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் முறையாக வெளியேறுவதற்கு அதற்கான திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும் என்றார். முதல்வர் பிறந்த நாள் செயல் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 30 வருட காலங்களாகவே ரசிகர் மன்றத்தில் இருந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் இந்த முறை அரசு அமைந்து முதல் முறையாக முதல்வர் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம்.
மக்கள் பயன் பெறும் வகையில் நலத்திட்டங்கள் அமையும் என்றார்.
அரசியல் தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
Hindusthan Samachar / GOKILA arumugam