Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது.
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.
படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ?
எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b