Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 15 ஜூன் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து பிரியும் மூன்று முக்கிய ஆறுகளின் ஒன்றான வெண்ணாறு லட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பாண்டுக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாகச் சென்று அரிச்சந்திரா ஆற்றில் கலக்கிறது.
இந்த வெண்ணாறு மற்றும் அதிலிருந்து பிரியும் பல்வேறு கிளை வாய்க்கால்கள் மூலம் வரும் நீரை ஆதாரமாகக் கொண்டு ஏராளமான கிராமங்களில் 75,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் வெண்ணாற்றில் வாழாச்சேரி பாலத்திலிருந்து இருந்து சுமார் 25 கிமீ தூரத்திற்கு மேலாக பல மாதங்களாக ஆறு தெரியாத வகையில் வெங்காய தாமரை மண்டி கிடக்கிறது.
இதனால், விவசாயத்திற்காக கடைமடை வரை செல்ல வேண்டிய நீர் சீராக செல்ல வழி இல்லாமல் தடுக்கப்படுகிறது. மேலும், ஆற்றில் வழி நெடுகிலும் பரவி கிடக்கும் வெங்காய தாமரை மூலம் ஆற்று நீர் மாசுபட்டு அதன் மூலம் நிலத்தடி நீரும் பாழ்பட்டு வருகிறது.
விவசாயிகளையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க தமிழக அரசு வெண்ணாற்றில் படர்ந்து கிடக்கும் வெங்காய தாமரைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வெண்ணாறு தண்ணீர் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் கூறுகையில், குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணை திறக்கவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணை காலதாமதமாக திறந்தாலும், திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தங்கு தடை இன்றி செல்ல வெண்ணாற்றில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரைகளால் கடைமடை விவசாயத்திற்கு காவிரி நீர் வருவது கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, தமிழக அரசு நீர்வளத்துறை , அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெங்காய தாமரைகளை முழுமையாக அகற்றி கடைமடை பகுதிக்கு விவசாயிகளுக்கும் காவிரி நீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும், அரசு இப்பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என மனவேதனை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN