Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களில் சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர், சங்கரன்கோவில் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது சிறுமி மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை உள்ளிட்டோர் பாலியல் ரீதியான தொந்தரவு மற்றும் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் 3 வயது குழந்தையின் உடல் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மனதை உலுக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பச்சிளம் குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், இத்தகைய சம்பவங்களை மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் சகித்துக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்பட வசனங்களைப் போல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பதை விட, தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ