Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 15 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் தனது வீட்டின் அருகே இருந்த கொட்டகையில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவரின் சகோதரர் கணேசன், செல்வியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் அவரையும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த சங்கராபுரம் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பாலப்பட்டு கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b