ஆற்றுப் பாலத்தின் படிக்கட்டு இடிந்து விழுந்து விபத்து - பள்ளிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் படுகாயம்
திருவாரூர், 15 ஜூன் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சபிதா மற்றும் பிரவீனா ஆகியோர், வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக கோட்டகம் பகு
ஆற்றுப் பாலத்தின் படிக்கட்டு இடிந்து விழுந்த விபத்தில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் படுகாயம்


திருவாரூர், 15 ஜூன் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சபிதா மற்றும் பிரவீனா ஆகியோர், வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக கோட்டகம் பகுதியில் உள்ள முள்ளி ஆற்றுப் பாலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் படிக்கட்டு இடிந்து சரிந்தது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இரு மாணவிகளுக்கும் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாணவிகளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தகவலின்படி, மாணவிகள் இருவரும் தற்போது சுயநினைவுடன் உள்ளனர், ஆனால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாலத்தின் படிக்கட்டு மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b