Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஜூன் (ஹி.ச.)
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் ஜூன் 19-ஆம் தேதி ஜெனீவாவில் பகைமையை நிறுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ்,
ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையிலும், அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்த இடைக்கால ஒப்பந்தத்தை மதித்து செயல்பட வேண்டும் என்றும், அது நிரந்தர அமைதிக்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மீண்டும் திறக்கப்படுவது இந்தியாவுக்கு நிவாரணம் அளிக்கும் என்றாலும், நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையாது என காங்கிரஸ் கூறியுள்ளது.
கடந்த ஒரு தசாப்தமாக உண்மையான ஊதிய வளர்ச்சி தேக்கமடைந்துள்ளதையும், சீனாவிலிருந்து அதிகரித்து வரும் இறக்குமதிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதால் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும், இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், வரி மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் முதலீட்டு சூழலை பாதித்துள்ளதாகவும், தனியார் முதலீடுகள் பல ஆண்டுகளாக மந்தமாகவே உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கொள்கை தொடர்பாக, 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் தற்போது மீண்டும் பிராந்திய மற்றும் உலகளாவிய செல்வாக்கை பெற்று வருவதாகவும், சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் வலுப்பெறுவது இந்தியாவுக்கு புதிய புவிசார் அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவில் கூடுதல் சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மனிதாபிமானக் கோணத்திலும் தேசிய நலன் கருதியும் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P