Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன், 15 ஜூன் (ஹி.ச.)
10-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
பர்மிங்காமில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக பேட்டிங் செய்து 68 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால் மற்றும் கேப்டன் பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
அந்த அணியின் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவருக்கு துணையாக ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளையும், ஷபாலி வர்மா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
முடிவில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA