Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், வீடுகள் மட்டுமின்றி தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அதன் கூடுதல் செலவு இறுதியில் மக்களிடமே சுமத்தப்படும் என்பதால், எந்த வகையான மின்கட்டண உயர்வும் மக்களை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதுடன், நிலைக்கட்டணமும் 471 சதவீதம் உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
இதன் விளைவாக தமிழகம் முழுவதும் 63 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், மேலும் பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்பு இழப்பும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி சிறு, குறு தொழில்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, கட்டண உயர்வை பரிசீலிப்பது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை காரணம் காட்டி வீடுகள், தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
அது சாத்தியமில்லையெனில், கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் சுமையை அரசே ஏற்று மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ