ஆத்தூர் அருகே அரசு நிலத்தில் கொட்டகை அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல்
சேலம், 16 ஜூன் (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள வரகூர் பகுதியில் அரசு நிலத்தில் கொட்டகை அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களி
மோதல்


சேலம், 16 ஜூன் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள வரகூர் பகுதியில் அரசு நிலத்தில் கொட்டகை அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வரகூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்முருகன் மற்றும் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் முருகேசன் குடும்பத்தினருக்கு, அரசு நிலத்தில் கொட்டகை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் கொட்டகை அமைக்கும் விவகாரத்தில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் செந்தில்முருகனின் மகள் பரமேஸ்வரி (19) காயமடைந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், அருகில் இருந்த அரளி விதையை அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அவரது தந்தை அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன. போலீசார் அந்த காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam