Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 16 ஜூன் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த
கொளப்பாக்கம் பகுதியில் தனியார் கல்லூரி வளாகத்தில் வாடகைக் கட்டிடத்தில் இந்த கல்வியாண்டிற்காக பள்ளி தொடங்கப்பட்டு, ப்ரீ-கேஜி முதல் 6-ஆம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளி தொடங்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே விளம்பரம் செய்து, மாணவர் சேர்க்கை மற்றும் போக்குவரத்து வசதிக்காக பெற்றோரிடமிருந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளியின் முதல் நாளான நேற்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல்கள் காணப்பட்டதுடன், ஜன்னல்களில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததும், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததும் பெற்றோரின் கவலையை அதிகரித்தது.
இதையடுத்து மாலை 3.30 மணியளவில் பள்ளி முடிந்ததும், 44 மாணவர்கள் பள்ளி வேன்களில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மாலை 4 மணிக்கு பள்ளியில் இருந்து புறப்பட்ட மாணவர்கள் இரவு 8 மணியை கடந்தும் வீடுகளுக்கு வராததால் பெற்றோர்கள் பதற்றமடைந்தனர்.
உடனடியாக வாட்ஸ்அப் குழு அமைத்து, வேன்களின் இருப்பிடத்தை கண்காணிக்க முயன்றனர்.
நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 7 வயது மாணவன் ஒருவர் இரவு 8.30 மணியளவிலும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வேன் ஓட்டுநர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு இடங்களுக்கு வருமாறு கூறியதாகவும், இறுதியில் முடிச்சூர் சாலைக்கு வருமாறு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இரவு சுமார் 9 மணியளவில் முடிச்சூர் பகுதியில் மாணவரை நடுரோட்டில் இறக்கிவிட்டதாகவும், இதனால் பெற்றோர்களுக்கும் வேன் ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும், போக்குவரத்து வசதி முறையாக வழங்கப்படவில்லை என்றும், அதிக கட்டணம் வசூலித்தும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளியில் சிசிடிவி வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஜன்னல் பாதுகாப்பு கம்பிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், பள்ளி மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கூறுகையில்,
எனது குழந்தையை 5 மணி நேரத்திற்கும் மேலாக வேனில் வைத்துச் சுற்றியுள்ளனர். ஒரு தாயாக இது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
பள்ளி நிர்வாகம் எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை,என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam