Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த முழுமையான கடன் தள்ளுபடி திட்டம் தற்போது ரூ.75,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த மே 25ஆம் தேதி ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கைகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 15ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள், மாநில அரசின் தற்போதைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கடன் தள்ளுபடி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ