மின் கட்டமைப்பை வலுப்படுத்த ₹15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் - முதலமைச்சர் விஜய் உத்தரவு
சென்னை, 16 ஜூன் (ஹி.ச) தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ₹15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், மின் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் முத
Eb


சென்னை, 16 ஜூன் (ஹி.ச)

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ₹15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், மின் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில், மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால் மின்சார பற்றாக்குறை இல்லை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள் மற்றும் சாலை தோண்டும் பணிகளின் போது கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களால் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் ₹2,275 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மாநிலம் முழுவதும் ஏற்கனவே 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ₹10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மின் சேவையை மேம்படுத்த 77 புதிய மின்தடை நீக்க மையங்கள், 7 கூடுதல் மின் பழுது நீக்கும் குழுக்கள், 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 நிலத்தடி கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் கண்காணித்து தீர்வு வழங்கும் வகையில் மின்னகம் சேவை மையம் (94987 94987) செயல்பட்டு வருகிறது. மேலும், விரைவில் வாட்ஸ்அப் சேவையும் புகார் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் சேமிப்பு அமைப்புகள், புதிய அனல்மின் மற்றும் நீர்மின் திட்டங்கள் ஆகியவற்றையும் அரசு முன்னெடுத்து வருகிறது.

தமிழக மக்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ