Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 16 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி அருகே உள்ள
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலைத் தொடங்கியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த விசைப்படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தில் சேதமடைந்தது “கப்பல் மாதா” என்ற பெயருடைய விசைப்படகு என்பது தெரியவந்துள்ளது. சின்னமுட்டத்தைச் சேர்ந்த ரவிங்டன் என்பவருக்குச் சொந்தமான இந்த விசைப்படகின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சின்னமுட்டம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam