சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஜூன் 24 முதல் விசாரணை துவக்கம்
கோவை, 16 ஜூன் (ஹி.ச.) கோவை சூலூரை அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். சிறுமியின் சடலம், கண்ணம்பாளையம் குளக்கரை அருகே காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் த
Coimbatore girl


கோவை, 16 ஜூன் (ஹி.ச.)

கோவை சூலூரை அடுத்த பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சிறுமியின் சடலம், கண்ணம்பாளையம் குளக்கரை அருகே காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, கார்த்திகை போலீசார் பிடிக்க முற்பட்ட போது, மாடியில் இருந்து குதித்ததில் கார்த்திக்கிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டு, ஏற்கெனவே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, இருவரின் கொடூரச் செயலைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து மருத்துவமனை சிகிச்சை ஓரளவுக்கு முடிந்ததைத் தொடர்ந்து, கார்த்திக் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கைதிகள் அறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நள்ளிரவில் சிறை வளாகத்திற்குள் கார்த்திக் அடைக்கப்பட்டிருந்த பகுதி அருகே, மற்ற வழக்குகளில் கைதாகி இருந்த சிலர், திடீரென்று ஒன்று திரண்டு கார்த்திக்கை தாக்கியுள்ளனர்.

இதில், காயமடைந்த கார்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின், மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் மீதான வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சூலூர் போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சம்பவம் நடைபெற்று 21 நாளில் 39 பக்க குற்றப்பத்திரிகையை சூலூர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதி முதல் துவங்குகின்றது.

குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் இருவரும் 24 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு போடப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN