Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான செ. ராஜேஷ் குமார் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பெ. விஸ்வநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொண்டு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் இயல்பானது என்றும், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல் கூட்டணிக் கட்சிகள் மீது பழி சுமத்தும் போக்கை திமுக கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் வெறும் 27 மாதங்களில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது மக்களின் தெளிவான தீர்ப்பை பிரதிபலிப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் அரசு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த பின்னரும் அவர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்காதது திமுகவின் அரசியல் நடைமுறை எனவும், தற்போதைய தவெக அரசு கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவைப் பொறுப்புகளை வழங்கி உண்மையான கூட்டாட்சி கொள்கையை செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள், அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை நேர்மையாக ஆய்வு செய்யாமல் கூட்டணிக் கட்சிகளை குற்றம் சாட்டுவது திமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களின் ஆதரவு ஏன் குறைந்தது என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்று பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட திமுக இழக்க நேரிடும் என்றும் செ. ராஜேஷ் குமார் மற்றும் பெ. விஸ்வநாதன் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P