கீதா ஜீவன் சொத்துக்குவிப்பு வழக்கு - காலதாமத மன்னிப்பு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவில் ஏற்பட்ட காலதாமதத்தை மன்னிக்கக் கோரும் மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்
Geetha


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவில் ஏற்பட்ட காலதாமதத்தை மன்னிக்கக் கோரும் மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 1996 முதல் 2001 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக, தூத்துக்குடி தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏ.யும் கீதா ஜீவனின் தந்தையுமான பெரியசாமி மீது 2002ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கில், பெரியசாமி தனது பெயரிலும், மனைவி எபனேசரம்மாள், மகன்கள் ராஜா, ஜெகன், மகள் கீதா ஜீவன் மற்றும் மருமகன் ஜூவன் ஜேக்கப் ராஜேந்திரன் ஆகியோரின் பெயரிலும் ரூ.2.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம், சொத்துக்கள் வாங்கப்பட்டதற்கான தனிப்பட்ட வருமான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கீதா ஜீவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 839 நாட்கள் காலதாமதமாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், அதற்கான தாமத மன்னிப்பு மனுவை தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், திமுக அமைச்சராக கீதா ஜீவன் பதவி வகித்ததால், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விடுதலை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்றும், அதனால்தான் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்களை பதிவு செய்த நீதிபதி, காலதாமதத்தை மன்னிக்கக் கோரும் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ