Enter your Email Address to subscribe to our newsletters

தம்புல்லா, 16 ஜூன் (ஹி.ச.)
இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று வருகின்றன.
இந்த தொடரில் இந்தியா-ஏ அணியை திலக் வர்மா வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-ஏ அணியும், இலங்கை-ஏ அணியும் மோதின.
டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய இந்தியா-ஏ அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
பிரப்சிம்ரன் சிங் 11 ரன்களிலும், வைபவ் சூர்யவன்சி 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும், கேப்டன் திலக் வர்மா 23 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியா-ஏ அணி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. அப்போது சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் இணைந்து அணியை மீட்டனர்.
இருவரும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தனர்.
சூர்யான்ஷ் ஷெட்ஜ் 72 ரன்களும், விப்ராஜ் நிகம் 51 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்தியா-ஏ அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது.
இலங்கை-ஏ அணி தரப்பில் விஜயகாந்த் வியஸ்காந்த் மற்றும் முகமது ஷிராஸ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை-ஏ அணிக்கு சதீரா சமரவிக்ரமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 93 ரன்கள் குவித்தார்.
மேலும் டிக்வெல்லா 37 ரன்களும், வனுஜா 25 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்களும் எடுத்தனர்.
எனினும் இந்தியா-ஏ பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால், இலங்கை-ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை-ஏ அணி 16 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்தியா-ஏ அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சூப்பர் ஓவரில் இலங்கை-ஏ அணி வெற்றி பெற்றது.
93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய சதீரா சமரவிக்ரமா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA