Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 ஜூன் (ஹி.ச)
கடந்த 2016ஆம் ஆண்டு கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, உறவைத் தொடர மறுத்ததாகக் கூறி உதயகுமார் என்ற மாணவர், வகுப்பறையினுள் நுழைந்து மரக்கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கரூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தனக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு வழக்கினை உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “சாட்சிகள் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். அடையாள அணி வகுப்பு முறையாக நடத்தப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், “கீழமை நீதிமன்றம் முறையாக எல்லா ஆதாரங்களையும் ஆராய்ந்து, தண்டனை வழங்கி உள்ளது. ஆகவே, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தன்னுடன் உறவை தொட விரும்பவில்லை என்பதற்காக, அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனுதாரரால் மாணவி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சமீப காலங்களில் காதல் உறவில் நிராகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்கும் அதுபோன்ற ஒரு துயரமான சம்பவம்.
சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்பட்ட மாணவர்கள் பலர் பிறழ் சாட்சிகளாக மாறியிருக்கின்றனர். தாக்குதல் நடத்தும்போது மாணவர்கள் யாரும் அதை தடுக்க முயற்சிக்கவில்லை. தடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் உண்மையை கூறியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு முரணாக சாட்சியங்களை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சவ ஊர்வலத்தை கடக்க முயன்ற காரை தாக்கிய போதை கும்பல் - 80 வயது மூதாட்டி உட்பட 3 பேர் காயம்
இது நாளை எந்த மாணவருக்கும் நடக்கலாம். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்தால் மட்டும் போதாது. அவை செயல்பாட்டிலும் இருக்க வேண்டும். இல்லையெனில் வெறும் காகித புலிகளாக மட்டுமே இருப்பார்கள் “என குறிப்பிட்ட நீதிபதிகள், “மாணவிக்கு ஆதரவாக உண்மையை கூறாமல் மாணவர்கள் தங்களது கடமையில் தவறிவிட்டனர். இது ஏமாற்றம் அளிக்கிறது. கல்வி அறிவை மட்டும் அல்ல; நல்ல குண நலன்களையும் உருவாக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளது என குறிப்பிட்டு, ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN