Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 ஜூன் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் அம்மா உணவகம் அருகே தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
கடந்த 15 நாட்களாக உணவகத்தில் கை கழுவும் வசதி செயல்படாததால், பொதுமக்கள் நடைபாதையிலேயே கை கழுவி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள் மற்றும் கொசுக்கள் பெருகி சுகாதாரக் கேடு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மண்டலம்-5 உதவி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது உணவின் தரம் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராமன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன், முருகேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சாம்பார் சாதம், வெண்பொங்கல், சாம்பார், பச்சரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த மாதிரிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வறிக்கை சுமார் 15 நாட்களில் கிடைக்கும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam