Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவையின் மரபுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து வல்லுநர்களால் பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, கவுன்சிலிங் முறையின் அடிப்படையில் மட்டுமே பணியிடமாறுதல் வழங்கப்படும் என்றும், அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிப்பட்ட முறையில் இடமாற்றம் வழங்கப்படாது என்றும் கூறினார்.
திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணியிடமாறுதல் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் விஜயின் வழிகாட்டுதலின்படி உயர்கல்வித்துறையில் பல புதிய அறிவிப்புகள் வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
கடந்த ஆட்சியின் கல்விக் கொள்கையே தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த ஆட்சி கல்விக் கொள்கை, இந்த ஆட்சி கல்விக் கொள்கை என்ற வேறுபாடு கிடையாது. முதலமைச்சர் விஜய் வரையறுத்துள்ள கல்விக் கொள்கை சட்டப்பேரவையில் இடம்பெறும். அதன் அடிப்படையில்தான் அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ