Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 ஜூன் (ஹி.ச.)
NEET 2026 மறு தேர்வுக்காக மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மாணவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்று We the Leader தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
மத்திய ரிசர்வ் போலீஸ் படை
(CRPF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பாதுகாப்பு, இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புடன் கூடிய நான்கு அடுக்கு சிசிடிவி அமைப்பு, பயோமெட்ரிக் மற்றும் முக அடையாள சரிபார்ப்பு, பல கட்ட உடல் சோதனை உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ ரகசிய மென்பொருள் வாங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போன்றே NEET மறு தேர்வுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசின் முயற்சிகளை மாணவர்கள் வரவேற்பார்கள் என்றாலும், தேர்வு மையங்களில் கூடுதல் சோதனைகள், நீண்ட நேர பரிசோதனை நடைமுறைகள் மற்றும் தேர்வு நேரம் 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு அழுத்தத்தைக் குறைப்பதே தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) நோக்கமாக இருந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் அதற்கு முரணாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும், மாணவர்கள் இன்னும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அதை விரைவில் சரிசெய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) உறுதியளித்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அர்த்தமுள்ள தீர்வுகள் தேவை என்றாலும், NEET மறு தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள தற்போதைய அணுகுமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P