Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஜூன் (ஹி.ச.)
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா நாட்டிற்கு பயணம் சென்றார்.
இந்திய பிரதமர் ஒருவர் அந்த நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
ஸ்லோவாக்கியா தலைநகர் பிரடிஸ்லாவாவில் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோவை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை விரிவான கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் போது இந்தியா–ஸ்லோவாக்கியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், ஸ்லோவாக்கியாவின் உயரிய குடிமக்கள் விருதான “முதல் வகுப்பு வெண் இரட்டைச் சிலுவை” விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இதுவாகும்.
இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“ஸ்லோவாக்கியாவின் உயரிய குடிமை விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டிருப்பது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும்.
இந்த 33-வது சர்வதேச கௌரவம், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மாற்றத்தை உருவாக்கும் தலைமைத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA