Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
சிறைத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் இடமாற்றம், பணி நியமனம் உள்ளிட்ட நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய வாரியம் ஒன்றை அமைத்து தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சிறைத்துறை ஐஜி தலைமையில் செயல்படும் இந்த வாரியத்தில் மொத்தம் நான்கு உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை வார்டன்கள் தொடங்கி சிறை அதிகாரிகள் வரையிலான அனைத்து நிலை பணியிட மாற்றங்களையும் இந்தக் குழு கண்காணித்து முடிவு செய்யும்.
சிறைத்துறையின் நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், பணியிட மாற்றம் தொடர்பாக எழும் குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் இந்த புதிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை பணியிட மாற்றம் மற்றும் பணியமர்த்தலில் இருந்த குழப்பங்களை களையவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, சிறைத்துறை பணியாளர்களின் இடமாற்றம், பணியமர்த்தல் கோரிக்கைகள் மற்றும் அது தொடர்பான நிர்வாக விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கும்.
இதன் மூலம் சிறைத்துறையின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்படும் தேக்க நிலை தவிர்க்கப்பட்டு, பணியாளர்களின் கோரிக்கைகள் உரிய காலத்தில் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உத்தரவு சிறைத்துறை பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b