வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை சேகரிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை
திருவள்ளூர், 16 ஜூன் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை முறையாக பராமரிக்
காவல்


திருவள்ளூர், 16 ஜூன் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை முறையாக பராமரிக்காத நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களது அடையாள ஆவணங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பாக முறையான பதிவுகள் பல இடங்களில் இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், அவர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஏஜெண்டுகளும் தொழிலாளர்களின் முழு விவரங்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரி தகவல்களை கட்டாயம் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P