Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் பி.வி. காலனி 29-வது தெருவில், பட்டாக்கத்தி காட்டி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தால் மோதி கீழே விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த வாகனத்தின் உரிமையாளரான முதியவர், வீட்டிலிருந்து வெளியே வந்து இளைஞரிடம் ஏன் இவ்வளவு வேகமாக வாகனம் ஓட்டுகிறாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த இளைஞர் முதியவரை ஆபாசமாக திட்டியதுடன், திடீரென பட்டாக்கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில், இளைஞர் அதிவேகமாக வந்து வாகனத்தின் மீது மோதி கீழே விழுவதும், பின்னர் முதியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பட்டாக்கத்தியை காட்டி மிரட்டுவதும் பதிவாகியுள்ளது.
முதியவர் அச்சத்தில் பின்வாங்குவதும், அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளிக்க முயற்சிப்பதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.
சாதாரண விபத்தாக தொடங்கிய சம்பவம் பட்டாக்கத்தி காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு மாறியிருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ