Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 16 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எழுமேடு ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் குடிசை மாற்றுத் திட்டம், பெண்களுக்கு சம சொத்துரிமை, உயர் கல்வி நுழைவுத் தேர்வு ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து ஆவேசமாக பேசிய பொன்முடி,
தற்போதைய ஆட்சியில் எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை. தமிழகம் முழுவதும் கரண்ட் கட் நிலவுகிறது. 'கட்... கட்... கட்' என்று மின்சாரத்தை துண்டித்து கொண்டே இருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தவெக அரசின் நிலை என்று விமர்சித்தார்.
மேலும், தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதமே ஆன நிலையில் இவ்வாறான சூழல் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் மக்கள் அனைத்தையும் புரிந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.
மகளிர் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது கலைஞரின் ஆட்சிதான் என்றும், தற்போது பெண்கள் குறித்து பேசும் ஆட்சியாளர்கள் அதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்கச் செல்லும்போது தனது பயண நோக்கம் மற்றும் சந்திப்பு விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பார் என்றும், ஆனால் தற்போதைய முதலமைச்சர் எதையும் வெளிப்படையாக கூறுவதில்லை என்றும் விமர்சித்தார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையும், எதிர்கால பொதுத் தேர்தலையும் குறிப்பிட்ட அவர்,
அடுத்த முதல்வராக மீண்டும் மு.க. ஸ்டாலினை உருவாக்குவோம் என கட்சியினரிடம் உறுதிமொழி எடுக்க அழைப்பு விடுத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam