புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்விக்கு திமுகவே காரணம் - வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
புதுச்சேரி, 16 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான வைத்திலிங்கம், இந்தியா கூட்டணியின் தேர்தல் தோல்விக்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புதுச்சேரியில் காங
வைத்திலிங்கம்


புதுச்சேரி, 16 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான வைத்திலிங்கம், இந்தியா கூட்டணியின் தேர்தல் தோல்விக்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களிடையே குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்தார்.

சிபிஎஸ்இ தேர்வு முறை மற்றும் நீட் தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெற்று வருவதாகவும், அவற்றை மாணவர்களே கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதாகவும் கூறினார்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் மூன்றாவது மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் விரும்பி கற்றுவந்த பிரெஞ்சு மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதை முதலமைச்சர்

N. ரங்கசாமி கண்டுகொள்ளவில்லை என்றும், எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதாகவும் கூறினார்.

மேலும், மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரிக்கு ரூ.15 ஆயிரம் கோடி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் L. முருகன் கூறியுள்ள நிலையில், அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசிய வைத்திலிங்கம், தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார்.

அந்தத் தொகுதியில் தவெக போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார். இந்தியா கூட்டணிக்கு புதுச்சேரியில் திமுக தலைமை தாங்கியதால், தேர்தல் தோல்விக்கான பொறுப்பும் திமுகவுக்கே சேரும் என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தவெகவை திமுக குறைத்து மதிப்பிட்டதே கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதியை மக்கள் முதலமைச்சர் தொகுதியாக கருதி வாக்களித்த நிலையில், அவர் பதவி விலகியதால் அத்தொகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் வைத்திலிங்கம் கூறினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P