பணி நிரந்தரம் கோரி சென்னையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) நீண்ட ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் இன்று காலை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப
பணி நிரந்தரம் கோரி சென்னையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

நீண்ட ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் இன்று காலை முதல் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விற்பனையாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும், பணி பாதுகாப்பு இல்லாததால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் அதற்கு உழைக்கும் எங்களுக்கு மட்டும் பணி நிரந்தரம் மறுக்கப்படுகிறது.

பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களிலும் ஓய்வின்றி வேலை செய்கிறோம். எங்களுக்கு குறைந்தபட்ச பணி பாதுகாப்பாவது வழங்க வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், பணியின்போது ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொள்வதாகவும், இதற்கு உரிய இழப்பீடோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

பணி நிரந்தரத்துடன், காலமுறை ஊதியம், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b