திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜயின் தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றம்


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ள நிலையில், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை பயன்படுத்தியதாகவும், நிலுவையில் உள்ள வருமான வரி வழக்கை வேட்புமனுவில் மறைத்து, வருமான வரி பாக்கி இல்லை என தவறான தகவல் அளித்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல், சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரச் செலவின விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை என்றும், கட்சி அடையாளங்களுடன் தேவாலயத்தில் பிரச்சாரம் நடத்தியதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

பல்வேறு தேர்தல் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் விஜய் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறியுள்ள இனிகோ இருதயராஜ், அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தல் வழக்கு விசாரணை முடியும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P