Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)
கச்சா எண்ணெய் விலை உயர்வு, டீசல் விலை அதிகரிப்பு மற்றும் லாரி வாடகை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சுங்கச்சாவடி கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
டீசல், சமையல் எரிவாயு, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், லாரி வாடகை 25 சதவீதம் வரை அதிகரித்திருப்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை மேலும் உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் போக்குவரத்து லாரிகளைச் சார்ந்திருப்பதால், சரக்கு கட்டண உயர்வு நேரடியாக விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, டீசல் மற்றும் பெட்ரோல் விலை கட்டுக்குள் வரும் வரை நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்தி, கொரோனா காலத்தைப் போல இலவச அனுமதி வழங்க வேண்டும் என்றும், எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு உணவகங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் உரம், விதை, விளைபொருட்களின் போக்குவரத்து செலவு உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ