Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 16 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று ஜூன் 16 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மொத்தம் 138 நாட்களுக்கு இந்த கால்வாயில் தொடர்ச்சியாக நீர் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளின் தேவைக்கேற்ப, விநாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 ஆகிய நான்கு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் திறப்பு மூலம் ராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுமார் 17,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
குறிப்பாக முதல் போக நெல் சாகுபடி மற்றும் பிற பயிர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கால்வாயில் சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்யவும், வீணாகாமல் கடைமடை வரை தண்ணீர் சென்றடையவும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பல மாதங்களுக்கு பிறகு கால்வாயில் நீர் வருவதால், கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b