Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 16 ஜூன் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தத்தணூர் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இன்று காலை அடுத்தடுத்து இருந்த வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
முதற்கட்ட தகவலின்படி, ஒரு வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவு காரணமாக தீப்பிடித்து, அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
இதில் இரண்டு சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. வெடிவிபத்தின் தாக்கத்தில் இரண்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், கூரைகள் முற்றிலும் சேதமடைந்தன.
அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.
இந்த கோர விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரகடம் காவல்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலிண்டர் வெடிப்புக்கான உண்மையான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாமை அல்லது எரிவாயு கசிவை கவனிக்காமல் விட்டதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b