பிணவறையில் 100 நாள்களைக் கடந்த ஆகாஷின் உடல் தகனம்
மதுரை, 17 ஜூன் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சுமார் 100 நாட்களுக்கு மேலாக அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த
Akash's body, held in the morgue for over 100 days, has been cremated


மதுரை, 17 ஜூன் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சுமார் 100 நாட்களுக்கு மேலாக அவரது உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷின் உடலை உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி விக்டோரியா உத்தரவிட்டிருந்தார்.

ஆகாஷ் இறந்து 100 நாள்களைக் கடந்த பிறகும் அவரது உடலைப் பெற அவரது உறவினர்கள் மறுத்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆகாஷின் உடலை இன்று அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்தது.

ராஜாஜி மருத்துவமனை தலைமை நிலைய மருத்துவ அதிகாரி சரவணன் தலைமையில் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், வீடியோ பதிவு செய்த குழுவினர் ஆகாஷின் உடலை வெளியே எடுத்து அடக்கம் செய்ய முயன்றனர்.

ஆனால், ஆகாஷின் உடலை காவல்துறையினர் எடுத்துச் செல்லக் கூடாது, தங்களது முறைப்படி உடலைத் தகனம் செய்ய வேண்டும் என ஆகாஷின் உறவினர்கள், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆகாஷின் பெற்றோர், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி இறந்து 102 நாள்களுக்குப் பிறகு ஆகாஷின் உடல் தத்தனேரி மின் மயானத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b