Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீதா ஜீவன்,
தமிழக அரசின் செயல்பாடுகள், சிங்கப்பெண் படை, அம்மா உணவகங்கள் மற்றும் வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
சிங்கப்பெண் படையில் பணியாற்றும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், நகை திருட்டு மற்றும் பாலியல் சீண்டல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், “சிங்கப்பெண் படை பெயரளவிலேயே செயல்படுகிறது” என்றார்.
கோவில்பட்டி அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல் கவலைக்குரியது என்றும், ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களின் நோக்கம் பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
த.வெ.க. அரசின் ஒரு மாத கால ஆட்சியில் மரபுகளும் சட்டங்களும் மதிக்கப்படவில்லை என்றும், அமைச்சர்களை விட மற்றவர்கள் துறைகள் குறித்து கருத்து தெரிவிப்பது நகைப்புக்குரியது என்றும் விமர்சித்தார்.
அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை வெற்று அறிக்கை மட்டுமே என்றும், தேர்தல் வாக்குறுதிகளான மாதம் ரூ.2,500 மகளிர் உதவித்தொகை, 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் கேட்பார்கள் என்பதால்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
“நிதிநிலை குறித்து ரகசியம் வைத்திருக்கிறோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய முதலமைச்சர் விஜய், தற்போது அந்த ரகசியத்தை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “ரீல்ஸ் எடுக்கிறவர்கள், ஷூட்டிங் செய்கிறவர்கள், நடித்துப் பழகியவர்கள் தமிழ்நாட்டை எந்த திசையில் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
ஸ்ரீவைகுண்டத்தில் த.வெ.க. பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்திலும், கட்சியினருக்கே பாதுகாப்பு இல்லையெனில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றார்.
திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைகளுக்காக முதல் களத்தில் நிற்கும் கட்சி திமுகதான் என்றும், கூட்டணி இல்லாத சூழலில் கட்சி மேலும் பலப்படும் என்றும் கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதேபோல், “த.வெ.க. அரசை விஜய் மாடல் அரசு” என சபாநாயகர் கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
அவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்,அதனால் அப்படித்தான் கூறுவார் என்று பதிலளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam