ஆனைமலை புலிகள் காப்பக இடையகப் பகுதியில் சட்டவிரோத வணிக கட்டிடங்கள் - வனத்துறைக்கு மதுரை அமர்வு நோட்டீஸ்
மதுரை, 17 ஜூன் (ஹி.ச) ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிக கட்டிடங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆனைமலை புலிகள் கா
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 17 ஜூன் (ஹி.ச)

ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிக கட்டிடங்களை அகற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி உள்ளிட்ட ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதி விரிவுபடுத்தப்பட்டு கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனப்பிரிவுகளின் சில பகுதிகள் இணைக்கப்பட்டதாகவும், பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகள் இந்த எல்லைக்குள் வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய வனவிலங்கு வாரியத்தின் முன்அனுமதி இல்லாமல் இப்பகுதியில் விடுதிகள், ஹோட்டல்கள், பூங்காக்கள் உள்ளிட்ட வணிக கட்டிடங்கள் கட்டப்படக்கூடாது என்ற விதிமுறைகள் இருந்தபோதிலும், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பல வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.

எனவே, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியில் புதிய வணிக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க தடை விதிக்கவும், ஏற்கனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி அந்தப் பகுதியை இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் தினமும் கேம்ப்பயர் நிகழ்ச்சிகளும், அதிக ஒலி எழுப்பும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், இந்த கட்டிடங்கள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், சரணாலயப் பகுதியில் செயல்படும் தனியார் விடுதிகளில் எவ்விதமான கேம்ப்பயர் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam