ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? – அரசின் செயல்திட்டத்தை வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வரவேற்றுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் , மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்தவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
அன்புமணி


தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வரவேற்றுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் , மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்தவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடியையும், மின்வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடியையும் தாண்டி, மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 சதவீதம் கடனுக்கான வட்டி செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் நிதிநிலை மோசமடைந்து வந்தது குறித்து பா.ம.க. தொடர்ந்து எச்சரித்து வந்ததாகவும், தற்போது அரசின் வெள்ளை அறிக்கை அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்ப்பதற்கான காரணமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் வரி வருவாய் அதிகரிக்கவில்லை என்றும், மாநில வருவாயில் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கடனுக்கான வட்டி போன்ற கட்டாய செலவுகள் 61.70 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான காலவரையறையுடன் கூடிய செயல்திட்டத்தை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் உள்ள குறைபாடுகள் மாநில வருவாய் குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும், வரி வசூலை அதிகரிக்க புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை விளக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், 2026-27 நிதியாண்டில் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கருத்தில் கொண்டால், ஏற்கனவே உள்ள கடன்களை அடைப்பதற்கும், நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் சேர்த்து சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை புதிய கடன் தேவைப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வளர்ச்சித் திட்டங்களை கூட செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய அளவிலான கடனை அரசு எவ்வாறு திரட்டப் போகிறது, தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதற்கான விரிவான செயல்திட்டத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P