Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தின் பழைய முனையப் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வதேச கார்கோ வளாகத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த சரக்குகள் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், நீண்ட நேரமாக உரிமையாளர் இல்லாமல் கிடந்த ஒரு பார்சல் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்கு வந்தது.
சந்தேகத்திற்கிடமான அந்தப் பார்சலில் வெடிபொருட்கள் உள்ளனவா என முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டதில் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து கார்கோ சுங்க அதிகாரிகள் பார்சலை திறந்து ஆய்வு செய்தபோது, அதில் வெளிர் வெள்ளை நிற பவுடர் இருப்பது கண்டறியப்பட்டது.
பார்சலின் மீது மருத்துவ ரசாயனப் பொருள் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இடம்பெற்றிருந்த முகவரி மற்றும் செல்போன் எண் போலியானவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் பவுடர் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில், அது அதிக மதிப்புடைய கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பார்சலை கார்கோ வளாகத்திற்குள் கொண்டு வந்தவர்கள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சரக்கு விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பும் நோக்கில் இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், சுங்கச் சோதனை தீவிரமாக இருந்ததால் அல்லது தொடர்புடைய நபர் வராததால், கடத்தல் கும்பல் பார்சலை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விமான நிலையத்தின் பாதுகாப்பு வளாகத்திற்குள் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கேட்பாரற்று கிடந்த சம்பவம், கார்கோ பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam