வாய்க்கால் கரை உடைந்து நெல் வயல்களில் வெள்ளநீர் புகுந்து 100 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு -வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
கடலூர் 17 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தின் வழியாக செல்லும் ஆணைவாரி ஓடை வாய்க்காலின் மறுபுறத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக முறையாக
நெற்பயிர்


கடலூர் 17 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தின் வழியாக செல்லும் ஆணைவாரி ஓடை வாய்க்காலின் மறுபுறத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால் மழைநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி, கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மேற்குப் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேறும் மழை வடிகால் நீரும் இந்த வாய்க்கால் வழியாகவே செல்கிறது.

அண்மையில் இரண்டு மணி நேரம் பெய்த மழையிலேயே வாய்க்கால் நிரம்பி கரை உடைந்து, வெள்ளநீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் குறுவை நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு, 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆணைவாரி ஓடை வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும், கரைகளை உயரப்படுத்தி பலப்படுத்த வேண்டும், மேலும் விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சிலர் விற்று விட்டு வெளியேறியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam