வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - மின் இணைப்பை துண்டித்து முகமூடி கொள்ளையன் கைவரிசை!
திண்டுக்கல், 17 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியின் வாயை துணியால் அமுக்கி, கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை முகமூடி அணிந்த கொள்ளையன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில்
செயின் பறிப்பு


திண்டுக்கல், 17 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியின் வாயை துணியால் அமுக்கி, கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை முகமூடி அணிந்த கொள்ளையன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தயம் கூத்தம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மோதுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமியின் மனைவி சாமியாத்தாள் (70) என்பவர், தோட்டத்து வீட்டில் நேற்று இரவு தனியாக இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மூதாட்டியின் வாயை துணியால் அமுக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். கொள்ளையன் சென்ற பிறகு மூதாட்டி எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டனர்.

இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) கார்த்திகேயன் மற்றும் கள்ளிமந்தயம் காவல் ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மின் இணைப்பை துண்டித்து திட்டமிட்டு மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட இந்த சம்பவம் மோதுபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் முகமூடி கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam