Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வளாகங்களில் இயங்கும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு தெளிவாக காட்சிப்படுத்துவது கட்டாயம் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில்,
பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விலை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயில்களில் நடைபெறும் பூஜைகளுக்காக விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் பூஜை பொருட்களின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அரசின் அனுமதி பெறாத எந்தவொரு பொருளையும் கோயில் வளாக கடைகளில் விற்பனை செய்ய அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே கடைகளில் வைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது, விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாதது, தரமற்ற பொருட்களை விற்பனை செய்வது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நியாயமான விலையில் தரமான பூஜை பொருட்களை பெறுவதோடு, கோயில் வளாகங்களில் வணிக நடவடிக்கைகளில் ஒழுங்குமுறையும் வெளிப்படைத்தன்மையும் ஏற்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P