Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 17 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் மீண்டும் நுரை பொங்கி துர்நாற்றம் வீசும் பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்டவை தென்பெண்ணை ஆற்றில் கலப்பதாக கூறப்படுகிறது.
அந்த நீர் கெலவரப்பள்ளி அணையை வந்தடைவதால், அணை நீர்த்தேக்கத்தில் நுரை உருவாகி துர்நாற்றம் வீசும் நிலை தொடர்கிறது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு சென்று, பின்னர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் வழியாக பாய்கிறது.
இந்த நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஆனால், மாசடைந்த நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, பயிர்களின் தரமும் குறைவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், பொதுமக்கள் இந்த நீரை குடிநீர் அல்லது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam